துப்பாக்கி' ரீமேக் 'ஹாலிடே' ஒரே நாளில் 12 கோடி வசூல்…!
விஜய், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்த 'துப்பாக்கி' படத்தின் இந்தி ரீமேக்காக, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான 'ஹாலிடே' படம் இரண்டு நாட்களுக்கு முன் உலகம் முழுவதும் வெளியானது. அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் நடித்துள்ள படத்திற்கு முதல் நாளே அமோக வரவேற்பு இருந்ததாம். முதல் நாளில் மட்டும் சுமார் 12 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டில் முதல் நாளில் அதிக வசூல் புரிந்த படங்களில் 'ஹாலிடே' நான்காம் இடத்தைப் பிடித்துள்ளதாம். படத்தைப் பற்றிய விமர்சனங்களும் படத்திற்கு ஆதரவாகவே வருவதால், இந்த படமும் இந்திப் பட வரலாற்றில் சாதனை புரியும் என பேசிக் கொள்கிறார்கள். ஏ.ஆர். முருகதாஸ் சில வருட இடைவெளிக்குப் பிறகுதான் மீண்டும் ஒரு இந்திப் படத்தை இயக்கினார். இருந்தாலும் இந்திப் பட ரசிகர்களின் எண்ணத்திற்கேற்ப படத்தைக் கொடுத்திருப்பதாகப் பாராட்டுகிறார்கள்.
தமிழிலிருந்து இந்திக்குச் செல்லும் இயக்குனர்களில் அதிகமாக பாராட்டைப் பெறுபவர் மணிரத்னம் மட்டுமே. அவருக்கடுத்து தற்போது அதிக பாராட்டைப் பெறுபவர் ஏ.ஆர்.முருகதாஸ்தான் என்கிறார்கள். பிரபுதேவாவும் சில இந்திப் படங்களை இயக்கியிருந்தாலும் இவர்கள் வரிசையில் இடம் பெற முடியாது என்கிறார்கள். தமிழ்த் திரையுலகில் அதிக பாராட்டைப் பெறும் ஷங்கர் போன்றவர்களாலேயே இந்தித் திரையுலகில் வெற்றி பெற முடியாத போது முருகதாஸ் பெற்றுள்ள இந்த இரண்டாவது வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதன் மூலம் முருகதாசின் சம்பளம் இன்னும் சில கோடிகள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'கத்தி' படத்திற்கே அவரது சம்பளம் 18 கோடி என்று சொல்கிறார்கள். விரைவில் தமிழில் விஜய், அஜித் போன்ற ஹீரோக்கள் வாங்கும் சம்பவளத்தை அவர் மிஞ்சி விடுவார் என்கிறார்கள்.
No comments: