சூப்பர் ஸ்டார் விவகாரம்! புகைச்சலை ஏற்படுத்தி விட்ட வெங்கட்பிரபு!
தமிழ் சினிமாவில் ரஜினிக்குப்பிறகு அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் யார் என்கிற பிரச்னை ரொம்ப நாளாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, விஜய், அஜீத் இருவருக்குமிடையே இந்த போர் உள்ளுக்குள் வெடித்திருக்கிற நிலையில், சூர்யாவும் ஏன் எனக்கு அந்த தகுதி இல்லையா? என்று தன் பங்குக்கு இன்னொரு பக்கம் நின்று சிங்கமாய் உறுமிக்கொண்டிருக்கிறது.
ஆனபோதும், இந்த விவகாரத்தில் அவரை யாரும் போட்டியில் சேர்க்கவில்லை. விஜய்-அஜீத் இருவரில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பதுதான் பெரும் பிரச்னையாக இருந்து கொண்டிருக்கிறது. தலைவா படத்தின் ஆடியோ விழாவின்போது அப்படத்தை இயக்கிய டைரக்டர் விஜய், அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று மேடையில் பேசினார். அதைக்கேட்டு அந்த விழாவுக்கு வந்திருந்த விஜய்யின் ரசிக கோடிகள் ஆர்ப்பரித்தனர்.
ஆனால், இந்த சேதி தல வட்டாரத்துக்கு சென்றதை அடுத்து, அவரது அபிமானிகள் அவரை உசுப்பி விட்டதோடு, அடுத்த சூப்பர் ஸ்டார் அஜீத் என்று மேடைகளில் தங்கள் சார்பில் பேசத் தொடங்கி விட்டனர். இருப்பினும அதுபற்றி இயக்குனர்கள் யாரும் அவர் சார்பில் வாய்மொழியாத நிலையில், அஜீத்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கிய வெங்கட்பிரபு, சமீபத்தில் தான் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், மூன்று சூப்பர் ஸ்டார்களுடன் நான் என்றொரு செய்தியை போட்டோவுடன் வெளியிட்டுள்ளார்.
இதில் எம்.ஜி.ஆர், ரஜினி, அஜீத்துடன் தான் நிற்கும் போட்டோக்களை வெளியிட்டிருக்கிறார். ஆக, அடுத்த சூப்பர் ஸ்டார் அஜீத்தான் என்று தன் மனதில் இருந்ததை இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வெளியிட்டிருக்கிறார் வெங்கட்பிரபு. ஆக, கொஞ்சம் நாளாக அடங்கியிருந்து இந்த சூப்பர் ஸ்டார் சர்ச்சையை மீண்டும் வெங்கட்பிரபு கிளப்பிவிட்டுள்ளார். இதையடுத்து, மேற்படி நடிகர்களின் ரசிகர் வட்டாரங்களில் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
No comments: