Header Ads

டேய் மாமா' வை இனிமேதான் காதலிக்கணும்

நம்ம வீட்டுப் பொண்ணு’ டிடி-க்குக் கல்யாணம்... அதுவும் காதல் கல்யாணம்! தமிழகப் பிரபலங்களுடன் 'சேட்டை சாட்’ அடித்த திவ்யதர்ஷினி, தன் காதலை இத்தனை சஸ்பென்ஸாக வைத்திருந்தது, ப்பா... சான்ஸே இல்லை டிடி! ஜூன் 29-ம் தேதி தன் 'பெஸ்ட் தோஸ்த்’ ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனைக் கரம் பிடிக்க இருக்கிறார் தமிழகத்தின் செல்லம்.

'கல்யாணப் பெண்’ணிடம் வாழ்த்துச் சொல்லிப் பேசினால், ''வெட்கப்பட்டுக்கிட்டே பேசச் சொல்ல மாட்டீங்கள்ல... நானும் ட்ரை பண்றேன். வரவே மாட்டேங்குதுப்பா'' என்று அதே குறும்பு!



''ஊர்ல எல்லார் ரகசியத்தையும் கேட்டு அடம் பண்ணுவீங்க. உங்க காதலை எப்படி இவ்வளவு ரகசியமா வெச்சிருந்தீங்க?''

''அட, இந்தக் காதல் எங்களுக்கே ரகசியமாத்தான் இருந்துச்சு. நானும் ஸ்ரீகாந்தும் அஞ்சு வருஷமா ஃப்ரெண்ட்ஸ். ஸ்ரீகாந்த், பப்பு, வினோ... என எட்டு பேர் கொண்ட குழு அது. போர் அடிச்சா சாட்டிங், வீக் எண்ட் ஹோட்டல்ல ஈட்டிங், அடிக்கடி ஃபிலிம்னு செம ஜாலி கேங்க். நாங்க எப்பவும் சேர்ந்தே சுத்திட்டு இருந்ததால, ஸ்ரீகாந்தையும் என்னையும் யாரும் லிங்க் பண்ணி யோசிக்கக்கூட இல்லை. இன்னொரு விஷயம்... சில மாசம் முன்னாடி வரை ஸ்ரீகாந்த் எனக்கு ஜஸ்ட் ஃப்ரெண்ட் மட்டும்தான். இப்போ பார்த்தா திடீர்னு கல்யாணம் பண்ணிக்கப்போறோம். எனக்கே இது சர்ப்ரைஸ்!''

''ஹலோ... உண்மையைச் சொல்லுங்க!''

''அட சாமி சத்தியம்ப்பா! ஸ்ரீகாந்தை நான் 'டேய் மாமா’னுதான் கூப்பிடுவேன். ரொம்ப நல்ல ஃப்ரெண்ட். எனக்குப் பயங்கரமா சப்போர்ட் பண்ணுவான். என் நல்லது, கெட்டது எல்லாம் அவனுக்குத் தெரியும். ரொம்பவே கேர் எடுத்துப்பான். அவன்கூட இருக்கிறதே கம்ஃபர்டபிளா இருக்கும். மத்தபடி காதல்ங்கிற அளவுக்கு எல்லாம் அப்ப எதுவும் யோசிக்கலை; பேசிக்கலை.



திடீர்னு ஸ்ரீகாந்துக்குப் பெண் பார்க்க ஆரம்பிச்சாங்க. அப்போ அவனுக்குள்ள என்னமோ உதைச்சிருக்கு. என்கிட்ட பேசினான். 'நான் யாரையோ, நீ யாரையோ கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு, நாமளே கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன?’னு கேட்டான். 'அய்யோ மாமா... உனக்கு என்னடா ஆச்சு?’னு கேட்டேன். 'நிச்சயிக்கப்பட்ட கல்யாணத்துல அதுவரை அறிமுகம் இல்லாதவங்களை மறுநாள்ல இருந்து காதலிக்கணும். நாமதான் இப்பவே பெஸ்ட் ஜோடியா இருக்கோமே..! அதனால நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா, காதலிக்கிறது ஈஸிதானே’னு கேட்டான். எனக்கு அந்த லாஜிக் பிடிச்சிருந்தது. அம்மாகிட்ட விஷயத்தைச் சொன்னேன். உடனே ரெண்டு குடும்பமும் பேசி, கல்யாணத் தேதி குறிச்சிட்டு மண்டபம் தேட ஆரம்பிச்சிட்டாங்க.

'அய்யோ... நாங்க இன்னும் காதலிக்கவே ஆரம்பிக்கலை’னு பதறிட்டு இப்போதான் ஸ்மைலிஸ், பரிசுகள்னு ட்ரைல் பார்த்துட்டு இருக்கோம். லவ் இஸ் பியூட்டிஃபுல்தாங்க!''

''கேட்டதும் ஓ.கே. சொல்ற அளவுக்கு ஸ்ரீகாந்த்கிட்ட அப்படி என்ன பிடிக்கும்?''

''அச்சச்சோ... இப்படில்லாம் வேற கேப்பீங்கல இனிமே! தெரியலையே... நீங்க என்ன எதிர்பார்த்துக் கேட்டாலும் எதுவுமே எனக்குச் சொல்லத் தெரியாதே! ஆங்... அவங்க வீட்டுக்குப் போறப்பலாம் ஸ்ரீகாந்த் அம்மா காபி கொடுப்பாங்க. செம டேஸ்ட்டா இருக்கும். அப்புறம் அவங்க வீட்டுல செய்யுற தயிர் சாதம் சூப்பரா இருக்கும். இதுக்காகவே ஸ்ரீகாந்த் வீட்டுக்கு அடிக்கடி போயிருக் கேன். அஞ்சு வருஷமா ஆன்ட்டி கொடுக்கிற காபி, தயிர் சாதத்துக்கு நான் அடிமை. ஒருவேளை, அதுகூடக் காரணமா இருக்கலாமோ!''

''கலாய்க்காதீங்க டிடி..?''

''ஹே... நிஜமாப்பா! அதுக்காக காபி, தயிர் சாதம் மட்டும் காரணம்னு சொல்லலை. ஸ்ரீகாந்த் மேல எனக்கு எக்ஸ்ட்ரா பாசம் இருக்கு. எவ்ளோ பெரிய பிரச்னையா இருந்தாலும் 'ஜஸ்ட் லைக் தட்’ சமாளிச்சிருவான். நான் பேசிட்டே இருப்பேன்ல. அவன் அப்படியே ஆப்போசிட். நான் எப்போ என்ன எவ்வளவு சாப்பிடுவேன்ங்கிற வரை அவனுக்குத் தெரியும். ரொம்ப நல்ல மனசு அவனுக்கு. அதுக்கு மேல என்ன வேணும் எனக்கு!?''

''அடுத்து என்ன ப்ளான்?''

''கல்யாணம்தான். அது முடிச்சிட்டு ஒரு நிகழ்ச்சிக்காக அமெரிக்கா போறேன்.

20 நாள்கள் புரோகிராம். திரும்பி வந்ததும் ஏகப்பட்ட நிகழ்ச்சி கமிட் ஆகியிருக்கேன். ஸ்ரீகாந்தும் ஒரு படம் டைரக்ட் பண்ணப் போறான். இப்படி கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் பிஸி... பிஸி... பிஸி..! இதுக்கு நடுவுல எங்கே காதலிக்கிறதுனு தெரியலை. 'எவ்வளவோ பண்ணிட்டோம்... இதைப் பண்ண மாட்டோமா?’னு சமாதானம் சொல்லிட்டு இருக்கேன். ஆனா, எனக்கு ஒரு விஷயம்தான் புரியலை. இவ்ளோ நாள் 'டேய் மாமா’வா இருந்த ஸ்ரீகாந்தை, இனி 'மாமா’னு மட்டும்தான் கூப்பிடணுமா... இல்லை 'டேய் மாமா’னே கூப்பிடலாமா..? யாராவது சொல்லுங்களேன். ஹலோ... உங்களைத்தான். ப்ளீஸ் சொல்லுங்களேன்!''

அந்தக் குறும்புதான் டிடி!

No comments:

Powered by Blogger.