இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் கைது
கேரளாவில் பல்வேறு இடங்களில் இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவரை பற்றி திடுக்கிடும் தகவல்கள் பல வெளியாகி உள்ளன.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
இளைஞர்களை ஏமாற்றி திருமணம்
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் சசீந்திரன். இவர், கொல்லம் பகுதியைச் சேர்ந்த ஷாலினி (வயது 29) என்ற பெண்ணை திருமணம் செய்தார். ஷாலினிக்கு 5 பவுன் தங்க நகைகளையும், ரூ.50 ஆயிரமும் திருமணத்தின் போது சசீந்திரன் கொடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஷாலினி அவரை ஏமாற்றி விட்டுச் சென்று விட்டார். இதுகுறித்து கோட்டயம் போலீசில் சசீந்திரன் புகார் கொடுத்தார். சசீந்திரன் ஷாலினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பெண் கைது
இந்நிலையில் ஷாலினியின் செல்போன் எண்ணை கொண்டு கோட்டயம் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். அவருடைய செல்போன் பயன்பாடு தமிழ்நாட்டில் பழனியில் இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கோட்டயம் சிங்கவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நிஷாம் தலைமையில் போலீசார் பழனிக்கு விரைந்து வந்தனர். அங்கு பதுங்கி இருந்த ஷாலினியை கைது செய்து கோட்டயம் அழைத்து சென்றனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன் விவரம் வருமாறு:-
இடுக்கி, கொளஞ்சேரி, கொல்லம், கோட்டயம், ஆலப்புழை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்களை ஏமாற்றி ஷாலினி திருமணம் செய்து உள்ளார். செய்திதாள்களில் மணமகள் தேவை என்று விளம்பரம் செய்யும் இளைஞர்களை ஷாலினி போனில் தொடர்பு கொண்டு பேசுகையில், அவர் வக்கீலாக இருப்பதாகவும், திருமணமாகி சில நாட்களில் கணவர் விபத்தில் இறந்துவிட்டதாகவும், தன்னுடைய சொத்தை உறவினர்கள் அபகரிக்கும் வகையில் மறுதிருமணம் செய்ய அனுமதிப்பதில்லை என்றும், ஆனால் என்னுடைய சொத்தை பாதுகாக்க திருமணம் செய்ய விரும்புவதாக அவர் கூறி உள்ளார்.
பல இளைஞர்களுடன் திருமணம்
ஷாலினியின் பேச்சில் மயங்கி, பல இளைஞர்கள் அவர் விரித்த வலையில் விழுந்து உள்ளனர். அவர்களிடம் தன்னுடைய நகைகளை உறவினர்கள் பதுக்கி வைத்து உள்ளதாகவும், திருமணத்திற்கு வளையல், தங்க சங்கிலி ஆகியவற்றை வாங்கி தரும்படி ஷாலினி பல இளைஞர்களிடம் கூறி இருக்கிறார். இதனை உண்மை என்று நம்பி அவருக்கு தங்க நகைகளை வாங்கி கொடுத்து உள்ளனர். பின்னர் திருமணமான மறுநாளை அவர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட பணத்தை பெற்றுக்கொண்டு, நைசாக நழுவி வேறு ஊர்களுக்கு இடம் மாறி ஷாலினி சென்று உள்ளார்.
அவரால் ஏமாற்றப்பட்ட இளைஞர் ஒருவர் தொடுபுழா குடும்ப நல விசாரணை கோர்ட்டில் ஷாலினிக்கும், தனக்கும் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்து இருப்பது தெரியவந்தது. மேலும் ஷாலினியால் ஏமாற்றப்பட்ட திருமணமான இளைஞர்கள் பலர் வெளியே தெரிந்தால் அசிங்கமாக இருக்கும் என்று புகார் கொடுக்க முன்வரவில்லை. இதனால் ஷாலினி போலீசில் சிக்காமல் இருந்து உள்ளார்.
இந்த தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
No comments: