விடுதியில் இருந்து தூக்கிச் சென்று பள்ளி மாணவிகள் 2 பேர் பாலியல் பலாத்காரம் ரத்த வெள்ளத்தில் இருந்தவர்களை பார்த்து பெண் சப்-கலெக்டர் மயக்கம்
பொள்ளாச்சி விடுதியில் தங்கியிருந்த 2 பள்ளி மாணவிகளை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மாணவர் விடுதி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையத்தின் அருகில் மாணவ-மாணவிகள் தங்கும் தனியார் விடுதி செயல்பட்டு வருகிறது. இது ஒரு கிறிஸ்தவ ஆலயத்தால் நடத்தப்படுகிறது. இந்த விடுதியில் ஏழை, கூலி தொழிலாளர்களின் குழந்தைகள் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.
விடுதியில் 3 மாணவிகள், 17 மாணவர்கள் என 20 பேர் உள்ளனர். இவர்கள் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள். விடுதி போதிய பாதுகாப்பு இன்றி செயல்படுவதாகவும், மாணவ-மாணவிகள் ஒரே அறையில் தங்க வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
பாலியல் பலாத்காரம்
நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12.30 மணிக்கு 2 மர்ம நபர்கள் போதையில் அந்த விடுதிக்கு வந்தனர். அப்போது அவர்கள் அங்கு தூங்கிக்கொண்டிருந்த மாணவிகளிடம் தண்ணீர் கேட்டனர். 2 மாணவிகள் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தனர்.
அப்போது திடீர் என்று அந்த நபர்கள் 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது மாணவி ஒருவரையும், 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவி ஒருவரையும் வாயைப்பொத்தி தூக்கிச்சென்றனர்.
ஒரு மாணவன் இதனை பார்த்து திடுக்கிட்டு அவர்களை தடுக்க முயன்றான். ஆனால் அவர்கள் அவனை தள்ளிவிட்டனர். மாணவிகளை ஒரு கட்டிடத்தின் மாடிக்கு கொண்டு சென்று அவர்களை கீழேதள்ளி பாலியல் பலாத்காரம் செய்தனர்.
போலீசில் புகார்
அந்த மாணவன் இதுபற்றி மற்றவர்களிடம் தகவல் கூறியதும், மாணவர்கள் அனைவரும் சத்தம் போட்டனர். விடுதி அருகில் உள்ள வீட்டில் தங்கியிருந்த காப்பாளருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக விடுதி காப்பாளர் இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து மாணவிகளை தேடினார்கள்.
அப்போது விடுதியின் அருகில் உள்ள ஒரு கட்டிடத்தின் மாடியில் 2 மாணவிகளின் முனகல் சத்தம் கேட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது 2 மாணவிகளும் ரத்தக் காயங்களுடன் சுருண்டு படுத்து இருந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை மீட்டு, பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 2 மாணவிகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சப்-கலெக்டர் மயக்கம்
தகவல் அறிந்த பொள்ளாச்சி பெண் சப்-கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே நேற்று காலை ஆஸ்பத்திரிக்கு சென்று பாதிக்கப்பட்ட சிறுமிகளை பார்த்தார். ரத்தக்காயங்களுடன், துயரநிலையில் இருந்த சிறுமிகளை பார்த்ததும் சப்-கலெக்டர் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் அவருக்கு முதல் உதவி அளித்தனர். பின்னர் அவர் சிறுமிகளுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அந்த விடுதியை சப்-கலெக்டர் ரஷ்மி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது விடுதியில் போதிய பாதுகாப்போ, அடிப்படை வசதிகளோ இல்லாததை அவர்கள் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த விடுதியை மூட சப்- கலெக்டர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து சப்-கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜெகடே நிருபர்களிடம் கூறியதாவது:-
அனுமதி இன்றி செயல்பட்ட விடுதி
பொள்ளாச்சி டி.இ.எல்.சி. மாணவ-மாணவிகள் விடுதியில் 2 மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதில் ஈடுபட்ட கொடூர நபர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த விடுதியில் குடிநீர் உள்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. பெண் காப்பாளர் இல்லை. இந்த விடுதி அனுமதியின்றி செயல்பட்டு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து விடுதியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
விடுதியில் உள்ள மாணவ-மாணவிகள் அனைவரும், அவர்களது பெற்றோர் சம்மதத்துடன் அரசு விடுதியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவ-மாணவிகள் விடுதிகள் அனுமதியின்றி செயல்பட்டால், அதனை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் விடுதியை மூடி சீல் வைத்தனர்.
ஐ.ஜி. விசாரணை
கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம், போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் மாணவிகளை சந்தித்து, அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறும்போது, ‘மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தது யார்? என்பது குறித்து முழு விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவோம்’ என்றார்.
பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். போலீசார் கூறும்போது, ஏற்கனவே ஒருசில நாட்கள் முன்பு சிலர் இதேபோல அந்த மாணவிகளிடம் தண்ணீர் கேட்டு, அவர்கள் தண்ணீர் கொடுக்க வந்தபோது கையை பிடித்து இழுத்துள்ளனர். ஆனால் அப்போது மற்ற அனைத்து மாணவர்களும் சேர்ந்து அவர்களை விடுதி காம்பவுண்டுக்கு வெளியே விரட்டி விட்டனர் என்றார்.
எனவே இந்த குற்றவாளிகள் ஏற்கனவே திட்டமிட்டே இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
No comments: