டீன் ஏஜ் கதாபாத்திரத்தில் அஜீத்!
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் நடிக்கிறார்கள். தற்போது அஜீத், அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த படம் தமிழ்த் திரையுலகில் முற்றிலும் வித்தியாசமான படமாக உருவாக்கப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுவரை பார்க்காத அஜித்தை இந்த படத்தில் பார்க்கலாம் என இயக்குனர் கௌதம் மேனனும் தெரிவித்துள்ளார். சூர்யாவுடன் இணைந்து செய்ய வேண்டிய படம் கைவிடப்பட்டதால் மிகவும் நொந்து போயிருந்த கௌதம் மேனன் இந்த படத்தை மிகப் பெரிய வெற்றிப் படமாகக் கொடுத்து, அந்த வெற்றி மூலம் சூர்யாவுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைத்துள்ளாராம். அதற்காக படத்தை மிகவும் ஸ்டைலிஷாக உருவாக்கி வருகிறாராம். அதனால்தான், படத்திற்கு வெளிநாட்டு ஒளிப்பதிவாளரையும் நியமித்தார் என்கிறார்கள்.
படத்தில் அஜீத் இருவேறு தோற்றத்தில் வருகிறாராம். ஒன்று அவரது சமீபத்திய வழக்கமான 'சால்ட் அண்ட் பெப்பர்' தோற்றம், மற்றொன்று மிகவும் இளமையான டீன் ஏஜ் கதாபத்திரமாம். அதற்காக அஜீத் இரவு பகல் பாராமல் உடற்பயிற்சி செய்து வருகிறாராம். பிளாஷ் பேக்கில் வரும் இந்த தோற்றத்தில்தான் அஜீத்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளார் என்கிறார்கள்.
என்னை ஒரு ஹீரோவாக பார்க்காமல் அந்த கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதற்கான நடிகராகவே பாருங்கள் என இயக்குனரிடமும் அஜீத் கேட்டுக் கொண்டுள்ளாராம். அதனால், இருவருமே சரியான புரிதலுடன் பணிபுரிந்து வருவதாக படக்குழுவினர் பேசிக்கொள்கிறார்கள்.
No comments: