சென்னை நட்சத்திர ஓட்டலில் பரபரப்பு; மாப்பிள்ளை பிடிக்காததால், திருமண மண்டபத்தில் இருந்து மணப்பெண் தப்பி ஓட்டம்
மாப்பிள்ளை பிடிக்காததால், திருமண மண்டபத்தில் இருந்து மணப்பெண் தப்பி ஓடிவிட்டார். தனது காதலருடன், அந்த பெண் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். சினிமாவில் நடப்பதுபோல, இந்த சம்பவம் அரங்கேறியது.
திடீர் ஓட்டம்
சென்னை மைலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் நட்சத்திர ஓட்டலில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று ஒரு திருமண நிகழ்ச்சி நடக்க இருந்தது. நேற்று இரவில் இருந்த மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டு உறவினர்கள், மண்டபத்திற்கு வந்து விட்டனர்.
று காலை 6 மணி அளவில், திடீரென்று, மணப்பெண்ணின் தந்தை பரபரப்புடன் ஒரு அதிர்ச்சி தகவலை, சொன்னார். மணப்பெண் சுஜாதாவை (வயது 24) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காணவில்லை என்று ஒரு பெரிய குண்டை தூக்கிபோட்டார். ஓட்டல் முழுவதும் தேடினார்கள். உறவினர் வீடுகளிலும் தேடிப்பார்த்தனர். மணப்பெண் என்ன ஆனார், என்பது தெரியவில்லை. உடனடியாக, ராயப்பேட்டை போலீசில் இதுகுறித்து, மணப்பெண்ணின் தந்தை புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ராஜசேகர், இதுதொடர்பாக திருமண மண்டபத்திற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்.
மணமகன் தவிப்பு
மணப்பெண் திருமண மண்டபத்தில் இருந்து ஓட்டம் பிடித்ததால், அடுத்து என்ன நடக்குமோ? என்ற தவிப்பில் மணமகனும், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பதறியபடி இருந்தனர். சந்தோஷ களிப்பில் இருந்த திருமண மண்டபம், சோகம் தழும்பி காணப்பட்டது.
தாலி கட்டவேண்டிய நேரம் போய்விட்டதால், மாப்பிள்ளை மண்டபத்தைவிட்டு, வெளியேறினார். அவரது உறவினர்களும் கொஞ்சம், கொஞ்சமாக மண்டபத்தைவிட்டு, கலைந்து சென்றனர். பெண் வீட்டாரோ, இந்த பொண்ணு இப்படி செய்துவிட்டதே, என்று பேசியபடி இருந்தனர்.
போலீஸ் நிலையத்தில் சரண்
மணப்பெண்ணை காணவில்லை, என்று வயர்லெஸ் மூலம் தகவல் சொல்லி, போலீசார் சென்னை முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இறுதியில் மணப்பெண் சுஜாதா, தனது காதலர் வைபவ்வுடன், கைகோர்த்தபடி, சென்னை அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்திருப்பது, தெரியவந்தது. போலீசார் அவர்களை மீண்டும், திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தனர்.
மணப்பெண் சுஜாதா, போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். நானும், வைபவ்வும், கடந்த 3 ஆண்டுகளாக உயிருக்கு, உயிராக காதலித்து வந்தோம். நான் பேஷன் டெக்னாலஜி பாடப்பிரிவில் பட்டப்படிப்பு படித்துள்ளேன். எனது காதலரும் பட்டப்படிப்பு படித்துவிட்டு, சொந்தமாக தொழில் செய்கிறார். நாங்கள் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். எங்கள் காதல் எல்லாவிதத்திலும், திருமணத்திற்கு பொருத்தமானது. எனது காதலர் வசதி மற்றும் அந்தஸ்தில் குறைவானவர் என்று, எனது தந்தை எங்கள் காதலை ஏற்கவில்லை. இந்த திருமணத்தை ஏற்பாடு செய்துவிட்டார். எனது தந்தைக்கு பாடம் கற்பிக்க வேண்டும், என்ற நோக்கத்தோடுதான், மண்டபம் வரை வந்துவிட்டு, பின்னர் எனது காதலரை வரச்சொல்லி, அவருடன் சென்று போலீசில் சரண் அடைந்தேன். எனது காதலருடன்தான், எனது திருமணம் நடக்கவேண்டும். அவர்தான் எனது கணவராக வரவேண்டும். இதே மண்டபத்தில் என் காதலருடன், எனது திருமணத்தை நடத்தி வைக்கவேண்டும். இதுவே எனது விருப்பம்.
இவ்வாறு மணப்பெண், போலீசாரிடம் தெரிவித்தார்.
திருமணம் நிறுத்தப்பட்டது
அதே மண்டபத்தில் சுஜாதாவை, அவரது காதலருக்கு திருமணம் செய்துவைக்க, அவரது தந்தை விரும்பவில்லை. உடனே திருமணத்தை நிறுத்திவிட்டார்.
திருமணம் ரத்து செய்யப்பட்டது, என்று மண்டப வாசலில் எழுதி போடப்பட்டது. சுஜாதாவை, அவரது காதலரிடம் ஒப்படைத்துவிடுகிறோம் என்றும், அவர்கள் விருப்பப்படி, எப்படி வேண்டுமானாலும், திருமணம் செய்து வாழட்டும் என்றும், சுஜாதாவின் தந்தை போலீசாரிடம் சொன்னார். சுஜாதாவும், அவரது காதலர் வைபவ்வும் அந்த கருத்தை ஏற்றுக்கொண்டனர்.
காதல் பறவைகள் பறந்தன
நாளை எங்கள் திருமணம் பதிவு திருமணமாக பத்திரபதிவு அலுவலகத்தில் முறையாக நடக்கும், என்று வைபவ் தெரிவித்தார். அதன்பிறகு, போலீசார் உள்பட அனைவரும் மண்டபத்தில் இருந்து கலைந்துசென்றனர்.
பெற்றோர் முடிவு செய்த திருமணம், காதலர்கள் திருமணமாக முடிவு மாறிப்போனது. காதலுக்கு தோல்வி இல்லை, என்று வைபவ்-சுஜாதா காதல் ஜோடியினர், கைஅசைத்தபடி, மண்டபத்தைவிட்டு, காரில் ஏறி பறந்தனர்.
No comments: